×

பாஜக எம்.பி.பிரிஜ் பூஷனை மே 21ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்..மல்யுத்த வீரர்களுக்கு விவசாயிகள் கெடு

புதுடெல்லி : பாலியில் தொல்லையில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக, விவசாயிகள் சங்கமும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதற்காக, ஜந்தர் மந்தரில் வெளிமாநிலங்களில் இருந்து விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இதனால், டெல்லியில் பதற்றம் அதிகமாகி உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி, விளையாட்டு உலகையே அதிர வைத்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த ஜனவரியில் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைத்தார். அந்த குழுவும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, தனது அறிக்கையையும் தாக்கல் செய்து விட்டது. ஆனால், பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 23ம் தேதி மல்யுத்த வீரர்கள் திடீரென தொடர் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கெஜ்ரிவால் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 14வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்தது. சில தினங்களுக்கு முன் போராட்டக் களத்தில் திடீரென குவிக்கப்பட்ட போலீசாருக்கும், மல்யுத்த வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தாக்கியதில் சில வீரர்கள் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சங்கத்தினர், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஜந்தர் மந்தரில் தாங்களும் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தனர்.அதன்படி, ராகேஷ் திகத் தலைமையிலான ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா’ அமைப்பை சேர்ந்த விவசாயிகள், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நேற்று டெல்லியை நோக்கி புறப்பட்டனர். மேலும், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்த சங்கம் நேற்று முன்தினம் அறிவித்திருந்து.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்களும், விவசாயிகளும் போராட்ட களத்துக்கு வருவார்கள் என்பதால் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
டெல்லியில் நுழையும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டத்துக்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க, எல்லைகளில் தடுப்புகள் போடப்பட்டு உள்ளன. அதையும் மீறி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் நேற்று ஜந்தர் மந்தருக்கு வந்தனர். மல்யுத்த வீரர்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும், அவர்களுக்கு மல்யுத்த வீரர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். போராட்டக் களத்தில் விவசாயிகள் குவிந்து வருவதால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜந்தர் மந்தரை சுற்றி சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், விவசாயிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

21ம் தேதி வரை கெடு
மல்யுத்த வீரர்களுடையே நேற்று பேசிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகத், ‘‘ஒவ்வொரு நாளும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் போராட்ட இடத்திற்கு வர முடிவு செய்துள்ளோம். அப்படி வருவோர் பகலில் இங்கு தங்கி மாலையில் திரும்புவார்கள். மல்யுத்த வீரர்களின் குழு, போராட்டத்தை கவனித்துக் கொள்ளும். அவர்களுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவளிப்போம். அதோடு, மே 21ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும். எனவே, அரசு அதற்குள்ளாக ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால், நாங்கள் எங்கள் அடுத்த வியூகத்தை வகுப்போம். எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும், மல்யுத்த வீரர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் என தெரிவித்தார்.

The post பாஜக எம்.பி.பிரிஜ் பூஷனை மே 21ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்..மல்யுத்த வீரர்களுக்கு விவசாயிகள் கெடு appeared first on Dinakaran.

Tags : Bajaka M. GP ,Brij Pushan ,New Delhi ,president ,wrestling ,Bali ,Indian ,consortium ,Delhi ,Bajaka M. ,GP ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி